Feb 24, 2014

வம்பு பேசாதீர்கள்.... ஆப்பு காத்திருக்கிறது!

ஒரு துறவி காட்டில் நிஷ்டையில் இருந்தார்.அவர் சுரதலப்பிட்சை எடுத்துச் சாப்பிடுவார்.(சுரதலப்பிட்சை என்றால் கையை நீட்டியபடி தவத்தில் இருப்பார்;அவர் கையில் யார் எதை வைக்கிறார்களோ அதுதான் அவருக்கு அன்றைய உணவு!அதைத்தான் சாப்பிட வேண்டும்;)


ஒருநாள்,வேட்டையாட வந்த அந்தப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த துறவி தவம் செய்து வந்த இடத்திற்கு வந்தான்;வேட்டையாடிக் களைத்துப் போன அந்த மன்னனுக்கு தாகம் எடுக்கவே இந்த துறவியைப் பார்த்து தண்ணீர் கேட்டான்.தன்னை மறந்து தவத்தில் இருந்த அந்த துறவிக்கு மன்னன் கேட்டது காதில் விழவில்லை;மன்னனுக்கோ வேட்டையாடிய களைப்பில்,இந்தச் சாமியார் தன்னை மதிக்கவில்லை; என்று நினைத்து,கோபத்தில் குதிரைச் சாணத்தை அந்த துறவியின் கைகளில் வைத்துவிட்டு குடிநீர் தேடி வேறு இடம் போய்விட்டான்.


துறவி கண்விழித்துப் பார்த்தபோது,தனது கையில் குதிரைச்சாணம் இருந்ததைக் கண்டு,அதையே அன்றைய உணவாகச் சாப்பிட்டுவிட்டார்.யார் எதை அவர் கையில் வைத்தாலும் அதைச் சாப்பிட வேண்டும் என்பது அவர் தனக்குத் தானே வகுத்துக் கொண்ட நியதி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆயின.மன்னன் இந்த சம்பவத்தை மறந்தே போனான்.


மன்னனின் மகள் பருவமடைந்து,பல ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகவில்லை;சரியான வரன் அமையவேயில்லை;மன்னன் தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து, ‘இளவரசிக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா? என்று பாருங்கள்’ என்று தனது மகளுடைய ஜாதகத்தைக் கொடுத்தான்.ஜோதிடர் அதை ஆராய்ந்து, “தேவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக யாகம் ஒன்று நடத்துங்கள்;அவ்வாறு செய்தால் இளவரசியின் திருமணதோஷம் நீங்கிவிடும்” என்று கணித்துச் சொன்னார்.அதன்படி,தேவர்களை மகிழ்ச்சிப்படுத்துவிதமாக யாகம் ஒன்றை நடத்தினார் மன்னன்.


துறவிக்கு மன்னன் செய்த பாவச்செயலை அறிந்த தேவர்கள்,காட்டுக்குப்போய் அந்த துறவியைச் சந்தித்தார்கள்.அவர்கள் நடந்ததை துறவியிடம் தெரிவித்தனர். “மன்னன் எங்களைக் குறித்து யாகம் நடத்தினான்.யாகத்தின் பலனை நாங்கள் தரவேண்டியது எங்கள் கடமை ஆகும்.ஆனால்,அதற்கு முன் உங்களை குதிரைச்சாணம் சாப்பிட வைத்த பாவத்தைப்போக்கினால் தான் நாங்கள் தரும் வரம் பலிதமாகும்;எனவே,இதற்குத் தாங்கள் தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று விவரித்தனர்.துறவியும் தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.


துறவி ,மன்னனின் அரண்மனைக்குச் சென்று, மன்னன் தனக்குச் செய்த இழிசெயலை நினைவூட்டினார். ‘நான் உனக்கு எந்த சாபத்தையும் கொடுக்கவில்லை;நீ செய்த வினையின் பலனை நீ அறுவடை செய்து கொண்டிருக்கிறாய்.இதிலிருந்து தப்பிக்க நான் உனக்கு ஒரு வழி சொல்கிறேன்;கொஞ்ச காலத்திற்கு அரசாங்கத்தை உனது மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு.நீயும் உன் மகளும் காட்டிற்குச் சென்று அங்கு ஆசிரமம் கட்டிக்கொண்டு இருங்கள்;நான் பட்ட துயரங்களை நீயும் அனுபவிக்கும் போது தான் என்னைப் போன்ற துறவிகள் படும் கஷ்டங்கள் உனக்கும் புரியும்.உனது பாவமும் மன்னிக்கப்படும்;தினமும் நீ என்னைப் போன்று பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும்;’ என்று உபதேசம்  செய்தார்.


மன்னனும் துறவியிடம் ஆசி பெற்று,தனது மகளுக்குத் திருமணம் ஆனால் போதும் என்பதற்காக அவரது வார்தைகளை நடைமுறைப்படுத்தத் துவங்கினான்.(பரிகாரங்களை எப்போதும் ரகசியமாகவே செய்ய வேண்டும்;பகிரங்கப்படுத்தினால்,பலன்கள் கிடைக்காமலேயே போய்விடும்)இதைப் பற்றி அறியாத அவனது நாட்டு மக்கள் மன்னன் மீதே அவச்சொல்லாகப் பேசினார்கள்.பேசக்கூடாத விதங்களில் மன்னனையும்,அவரது மகளையும் இணைத்து வைத்துப் பேசினார்கள்.இப்படி நாட்டு மக்கள்,அவர்களின் மன்னனைப் பற்றிப் பேச,பேச பேசியவர்களிடம் மன்னனின் பாவங்கள் ஒட்டிக்கொண்டன.மலை போல இருந்த பாவச்சுமையானது,நாடு முழுக்க இருந்த மக்களின் அவச்சொற்களால் விலகிவிட்டது.


ஒருநாள்,ஒரு பார்வையில்லாத கணவனும்,அவனது மனைவியும் அந்த காட்டு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.அந்த பார்வையில்லாத கணவன்,தனது மனைவியிடம், “இன்று நமக்கு யார் உணவு தருவார்?” என்று கேட்டான்.
அதற்கு அவன் மனைவியோ, “தன் மகளுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற ஒரு உன்னதமான லட்சியத்திற்காக, ராஜ்ஜியத்தையே தியாகம் செய்துவிட்டு,காட்டில் தவசியாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு உன்னதமான மன்னனின் ஆசிரமத்தில் தான் நமக்கு இன்று உணவு!!!” என்று கூறினாள்.இருவரும் மன்னனின் ஆசிரமத்தை அடைந்து இளவரசி அளித்த உணவைச் சாப்பிட்டனர்.


இளவரசியிடம், ‘என் புருஷன் பார்வையற்றவர்;இவருக்காக வாழ்நாள் முழுவதும் நான் தியாகம் செய்திருக்கிற பலனில் உனக்கு ஆசிர்வாதம் செய்கிறேன்.உனக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்’ என்று இளவரசிக்கு குங்குமம் வைத்து ஆசி கூறினாள்.இந்த ஆசியாலேயே அடுத்து வந்த சில மாதங்களில் இளவரசிக்கு நல்ல வரன் அமைந்து சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்தது.

இந்த உண்மைச்சம்பவம் தெரிவிப்பது என்ன?
தப்பு செய்பவருக்குத் தண்டனை நிச்சயமாக உண்டு;அந்த தண்டனை எப்படி கழியும்?
தப்பு செய்தவரின் கர்மாவை வேறு யாராவது வாங்கிக் கொண்டால் தான் போகும்.
யார் அடுத்தவரின் தப்புக்களை வாங்கிக் கொள்கிறார்கள்?
பிறரின் வாழ்க்கையில் நடந்த உண்மைநிலையை அறியாமல் வம்பு பேசுபவர்கள்தான் அடுத்தவரின் தப்புக்களின் கர்மவினைகளை வாங்கிக் கொள்கிறார்கள்.இவன் இப்படி,அவன் அப்படி,அவளைப் பற்றி எனக்குத் தெரியாதாக்கும்;இவளைப்பற்றி எனக்கு அப்பவே தெரியுமே என்று வம்பு பேசுபவர்களே அடுத்தவர்களின் கர்மச்சுமைகளை சுமக்கிறார்கள்.

நன்றி:ஜோதிடபூமி

0 comments:

Post a Comment